Wednesday, 30 November 2011

அந்நிய முதலீடு மெய்ஞானம்

வால்மார்ட்டின் கடைகளின் கருங்கல் சுவர்களில்
மண்டையை முட்டிக்குங்க!
வலியோ,கீறலோ அவன்கடை பிளாஸ்டரை
வாங்கியே ஒட்டிக்குங்க!
கால்மாட்டில் நிக்குது "கவருமென்ட்",தலையில்
கை கொண்டு குட்டிக்குங்க!
கஷ்டமும் நஷ்டமும் ஏழையின் கஞ்சியைக்
காய்ச்சுற  சட்டிக்குங்க!
கோல்மால் கம்பெனி,மேல்மாடி கட்டுவான்,
கொச்சையாய்த் திட்டிக்குங்க!
குடைகளைப் பிடிக்குற அரசின் வணக்கம்,அவன்
கொடுக்கிற பெட்டிக்குங்க!
நால்வழிச் சாலையில் பிச்சைத் தொழிலுக்கு
நடைமேடை கட்டிக்குங்க!
நமக்கென அவன்விடும் ஒரேதொழில் அதுதான்
கைகளைத் தட்டிக்குங்க!

Sunday, 27 November 2011

மீனவர் மெய்ஞானம்

மீனவர் மீதிலே தாக்குதல் நடந்தால்
மீன்களின் மேல்தான் வழக்குத் தொடரனும் ;
நடுக்கடல் உரிமையை மறுகரைத் தீவின்
கொடுக்கு களுக்கே கொடுத்ததை  உணர்ந்தும்
ஆழ்கடல் வாசம் மீன்களுக் கெதற்கு ?
ஆண்டவர் வரிசையை ஆள்வதே தெற்கு !
தரகரின் லாபமே சட்டம்;  எதிர்த்தால்
நரகம் உணர்த்த நடிப்பதே வழக்கு !
தலைமிக வளைத்துத் தளை,தொடை நடுங்கிக்
கொலைகளின் வரிசைக்குக் குறுநரிக் காரணம்
கோத்த பய(ல்)களின்முன்  அரசதந் திரத்தில்
தோத்த பயல்களாய்த் தொங்கலே ஆளுகை!
ஆகவே மீன்களே, வாருங்கள் அருகிலே !
போகவே வேண்டாம் கடலின் நடுவிலே !
மீனவர் வாழ்வினைக் காத்திடல்
மீன்களே உங்கள்  பெருங்கடன் தானே !

Saturday, 26 November 2011

மின்வெட்டுக்கும் காதலுக்கும்-சிலேடை

அணைக்கும் அடிக்கடியே;ஆரழுத்த மாற்றும்;
இணைக்கும் இருளும் எரியும்;-பிணைக்கும்
கரணம் பல நிலையாய்க் காட்டும்மின் வெட்டும்
சுரணையுள காதலும் சொல்!


சிலேடை விளக்கம்
அணைக்கும்-காதலால்  -  மின் வெட்டினால் 
அழுத்தம் ஆற்றும்  -  அழுத்தம்மாற்றும் 
இருளும் தகிக்கும்  -  இருளையும் வெப்பத்தையும் இணைக்கும் 
அணைப்பின் வகைகள்  -  மின் வெட்டின் காரணம்

















கைத்தட்டல்கள்

நட்சத்திரங்கள் கண் சிமிட்டின,
மொட்டை மாடியின்
ஒற்றைக்  கவிஞனுக்காக!



                               ஒளிப்பிழை
வார இதழ் ஆசிரியரின்
குப்பைக் கூடையுள் வெளிச்சம்!
நல்ல கவிதை!


                        
                             விழலதிகாரம்
கொட்டிக் கிடக்கும் விண்மீன்கள்!
தொட முடியாத ஏக்கத்தில்
அரசியல்வாதி!










பணப்பெண்

மகாலக்ஷ்மிபோல் பொண்ணு வேணும்ஒரு மாப்பிளைக்கே!
சரஸ்வதி பார்வதி வேண்டாமாம்அந்தக் கைப்பிள்ளைக்கே!
லக்ஷ்மிஎன்றால்அவள் பணம்இவன் கைவிட்டுப் போகாது!
அறிவும் வலிமையும் அமைஞ்சபெண் ஆணுக்கு ஆகாது!

உரை-நுரை-திரை?

புகழ்மிக்க சிலரது சுகமுள்ள அறிக்கையில்
பொய்களும் நிஜம் போலே!
அகத்துக்கும் முகத்துக்கும் நகத்தின் நுனித்தொடர்பும்
அமைவதில்லை "மேலே"!
"ஜெகத்துக்கும் ஒளிதரும்" எனும் உரை வறுமையர்
தெருக்களில் வரவில்லையே!
பகட்டுக்குள் இருக்கைக்குள் சுகித்தவர் "குறி"க்கென
வளைக்கும் அறிவின் "வில்லையே"!


பொய் மணக்குது,"பொருள்"  விளக்குது கடற்கரைகளிலே!
நெய் மணக்குது பொய் விதைப்பவர் சமையலறையிலே!
மை வழியுது,அவர் உரைவழி,தினசரிகளிலே!
பை நிறையுது,கை  இறங்குது ஏழை தலையிலே!...







அறிமுகம்

வணக்கம்.நான் ஸ்ரீ.மதிவாணன்.பாவேந்தரின் மாணவ வழியினன்.சிலேடைக்   கவி.என் குரு பாவலரேறு மணிவேலனார்.நான் பொது துறை ஊழியன்.பல ஆண் குரல்களிலும் பல பெண் குரல்களிலும் பாட வல்ல மெல்லிசைப் பாடகன்."சிலேடைக்கவிமணி " பட்டம் வாங்கியிருக்கிறேன்.பல மரபு வழிக் கவிதைகளில் நாட்டு நடப்பைபப் பதிவு செய்திருக்கிறேன்.தினமணி நாளிதழில் கட்டுரைகளும் சிறப்புக் கடிதங்களும் எழுதியுள்ளேன்.ஜனசக்தி நாளிதழில் கவிதைகளும் கட்டுரைகளும்,தீக்கதிரில் கவிதைகளும் எழுதியுள்ளேன்.திரைப்படங்களுக்கான கருத்தியலில் பல பாடல்களை எழுதி வைத்துள்ளேன்.ஊடகம் மற்றும் திரைத் துறையிடமிருந்தும்   நல்ல வாய்ப்புகளை எதிர் நோக்கி இருக்கிறேன்.மேடை பேச்சு பட்டிமன்றம்,கவியரங்கம் பல பல கண்டிருக்கிறேன்.தொலைக்காட்சிகளில்  பேச்சரங்கங்கள்,பாட்டுக்குப் பாட்டு நிகழ்வில் முதலிடம் போன்றனவும் கண்டிருக்கிறேன்.என் திறமைகளுக்கு அங்கிகாரம் தேடி நிற்கிறேன்.